நற்றிணை 41 - 45 of 400 பாடல்கள்



நற்றிணை 41 - 45 of 400 பாடல்கள்

41. பாலை - இளந்தேவனார்

பைங் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புறக் களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே

- பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது

விளக்கவுரை :

42. முல்லை - கீரத்தனார்

மறத்தற்கு அரிது ஆல் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல் அதனால்
ஏகுமின் என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே

- வினை முற்றி மீள்வான் தேர்பாகற்குச் சொல்லியது

விளக்கவுரை :

43. பாலை - எயினந்தையார்

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

- பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது

விளக்கவுரை :

44. குறிஞ்சி - பெருங் கௌசிகனார்

பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி
மனை வயின் பெயர்ந்த காலை நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த
நீடு இலை விளை தினை கொடுங் கால் நிமிரக்
கொழுங் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்
குடம் காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே

- இச்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது

விளக்கவுரை :

45. நெய்தல் - அறியப்படவில்லை

இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ
புலவு நாறுதும் செல நின்றீமோ
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே

- குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books