நற்றிணை 46 - 50 of 400 பாடல்கள்



நற்றிணை 46 - 50 of 400 பாடல்கள்

46. பாலை - அறியப்படவில்லை

வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து
நல் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே

- பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

47. குறிஞ்சி - நல்வெள்ளியார்

பெருங் களிறு உழுவை அட்டென இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு இது என யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே

- சிறைப்புறமாகத் தோழி தலைமகட்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

விளக்கவுரை :

48. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்றை அனைய ஆகி இன்று உம் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே

- பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

49. நெய்தல் - நெய்தல் தத்தனார்

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று நாம் அறியின் எவனோ தோழி
மன்றப் புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே

- தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்தூஉம் ஆம்

விளக்கவுரை :

50. மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ

அறியாமையின் அன்னை அஞ்சி
குழையன் கோதையன் குறும் பைத் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்
கேட்போர் உளர்கொல் இல்லைகொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர்
நாண் இலை எலுவ என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே

- தோழி பாணர்க்கு வாயில் மறுத்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books