நற்றிணை 26 - 30 of 400 பாடல்கள்



நற்றிணை 26 - 30 of 400 பாடல்கள்

26. பாலை - சாத்தந்தையார்

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய்
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ் சூழ் ஓதி பெருந் தோளாட்கே

- தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி தோழி செலவு அழுங்குவித்தது

விளக்கவுரை :

27. நெய்தல் - குடவாயிற் கீரத்தனார்

நீயும் யானும் நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றி
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று எனக் கூறா தோளே

- சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇயது

விளக்கவுரை :

28. பாலை - முதுகூற்றனார்

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போலக் கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னி
கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே

- பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது - குறை நயப்பும் ஆம்

விளக்கவுரை :

29. பாலை - பூதனார்

நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி
யாங்கு வல்லுநள்கொல்தானே யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல் என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ
வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே

- மகள் போக்கிய தாய் சொல்லியது

விளக்கவுரை :

30. மருதம் - கொற்றனார்

கண்டனென் மகிழ்ந கண்டு எவன்செய்கோ
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே
- பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்றார்க்குத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books