நற்றிணை 21 - 25 of 400 பாடல்கள்



நற்றிணை 21 - 25 of 400 பாடல்கள்

21. முல்லை - மருதன் இளநாகனார்

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே உதுக் காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி
நாள் இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே

- வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது

விளக்கவுரை :

22. குறிஞ்சி - அறியப்படவில்லை

கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே

- வரைவு மலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது

விளக்கவுரை :

23. குறிஞ்சி - கணக்காயனார்

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே

- தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது

விளக்கவுரை :

24. பாலை - கணக்காயனார்

பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும் நாம் எனச் சொல்ல சேயிழை
நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே

- பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது

விளக்கவுரை :

25. குறிஞ்சி - பேரி சாத்தனார்

அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே

- தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books