நற்றிணை 16 - 20 of 400 பாடல்கள்



நற்றிணை 16 - 20 of 400 பாடல்கள்

16. பாலை - சிறைக்குடி ஆந்தையார்

புணரின் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைச்
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழுநீர் வியலகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்
எனைய ஆகுக வாழிய பொருளே

- பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது

விளக்கவுரை :

17. குறிஞ்சி - நொச்சிநியமங்கிழார்

நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னை
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே

- முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது

விளக்கவுரை :

18. பாலை - பொய்கையார்

பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல்அம் தொண்டிப் பொருநன் வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன் பாசறை
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே

- பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது

விளக்கவுரை :

19. நெய்தல் - நக்கண்ணையார்

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே

- புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

விளக்கவுரை :

20. மருதம் - ஓரம்போகியார்

ஐய குறுமகட் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர கலிங்கம் துயல்வர
செறிதொடி தௌ ர்ப்ப வீசி மறுகில்
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை கொடி முயங்கலளே

- பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன் யாரையும் அறியேன் என்றாற்குத் தலைவி சொல்லியது வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books