நற்றிணை 11 - 15 of 400 பாடல்கள்



நற்றிணை 11 - 15 of 400 பாடல்கள்

11. நெய்தல் - உலோச்சனார்

பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே
காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு

- ஆற்றாளாய தலைமகட்கு தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

12. பாலை - கயமனார்

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பல் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
இவை காண்தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

- தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது

விளக்கவுரை :

13. குறிஞ்சி - கபிலர்

எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந் தோளோயே கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே
இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று

- தலைவியின் வேறுபாடு கண்ட தோழி தலைவி மறைத்தற்குச் சொல்லியது

விளக்கவுரை :

14. பாலை - மாமூலனார்

தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர்ஆயினும் நல்குவர்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது
அலர் எழச் சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே

- இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது

விளக்கவுரை :

15. நெய்தல் - அறிவுடைநம்பி

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம் அலர்க இவ் ஊரே

- வரைவு நீட்டித்தவழி தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books