நற்றிணை 31 - 35 of 400
பாடல்கள்
31. நெய்தல் - நக்கிரனார்
மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கி
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ் சினை புன்னை கடுஞ் சூல் வெண் குருகு
உலவுத் திரை ஓதம் வெரூஉம்
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே
- தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி
வன்புறை எதிர் அழிந்தது
விளக்கவுரை :
32.
குறிஞ்சி
- கபிலர்
மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் எனபது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுத்தரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே
- தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது
விளக்கவுரை :
33.
பாலை
- இளவேட்டனார்
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல்லுடை படுவில் கலுழி தந்து
நிறை பெயல் அறியாக் குன்றத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்கொல்லோ மெல்லியல் நாம் என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே
- பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது
குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது
விளக்கவுரை :
34.
குறிஞ்சி
- பிரமசாரி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே
- தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய்
வெறி விலக்கியது
விளக்கவுரை :
35.
நெய்தல்
- அம்மூவனார்
பொங்கு திரை பொருத வார் மணல் அடை கரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின்தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர்
கட்களி செருக்கத்து அன்ன
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே
- மணமகனைப் பிற்றை ஞான்று புக்க தோழி
நன்கு ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது
விளக்கவுரை :