நற்றிணை 376 - 380 of 400 பாடல்கள்
376. குறிஞ்சி - கபிலர்
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய
நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி
வறும் புனம் காவல் விடாமை
அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே
- தோழி கிளிமேல் வைத்துச்
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது
விளக்கவுரை :
377. குறிஞ்சி - மடல் பாடிய
மாதங்கீரனார்
மடல் மா ஊர்ந்து மாலை சூடி
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலமாகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்கொல்லோ
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே
- சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய
தலைமகன் தோழி கேட்ப தன்னுள்ளே சொல்லியது
விளக்கவுரை :
378. நெய்தல் - வடம வண்ணக்கன் பேரி
சாத்தனார்
யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே
- தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
379. குறிஞ்சி - குடவாயிற் கீரத்தனார்
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்தன்ன வீ ததை இணர
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வெளவலின் கொடிச்சி
எழுது எழில் சிதைய அழுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே
பாஅய் அவ் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே
- தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை
கூறியது காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
380. மருதம் - கூடலூர்ப் பல்கண்ணனார்
நெய்யும் குய்யும் ஆடி மெய்யடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப்
புரவியும் பூண் நிலை முனிகுவ
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே
- பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
விளக்கவுரை :