நற்றிணை 361 - 365 of 400 பாடல்கள்



நற்றிணை 361 - 365 of 400 பாடல்கள்

361. முல்லை - மதுரைப் பேராலவாயர்

சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே

- வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது

விளக்கவுரை :

362. பாலை - மதுரை மருதன் இள நாகனார்

வினை அமை பாவையின் இயலி நுந்தை
மனை வரை இறந்து வந்தனை ஆயின்
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
கடுஞ் செம்மூதாய் கண்டும் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே

- உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது

விளக்கவுரை :

363. நெய்தல் - உலோச்சனார்

கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப
பைந் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே

- பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்

விளக்கவுரை :

364. முல்லை - கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப
உயிர் செலத் துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியடு ஒருங்கு தலைவரினே

- தலைமகள் பிரிவிடை மெலிந்தது

365. குறிஞ்சி - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்

அருங் கடி அன்னை காவல் நீவி
பெருங் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே

- தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்துஇன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books