நற்றிணை 356 - 360 of 400 பாடல்கள்
356. குறிஞ்சி - பரணர்
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல செல வர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையளாக
குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே
- வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
விளக்கவுரை :
357. குறிஞ்சி - குறமகள் குறியெயினி
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே
- தலைமகன் வரைவு நீடிய இடத்து
ஆற்றுவல் என்பது படச் சொல்லியது மனை மருண்டு வேறுபாடாயினாய் என்ற தோழிக்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
358. நெய்தல் - நக்கீரர்
பெருந் தோள் நெகிழ அவ் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக எற் கண்டு நாணி
நின்னொடு தௌ த்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்புமதி வாழிய நீ என
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்
அரும் பெறல் ஆய் கவின் தொலைய
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே
- பட்டபின்றை வரையாது பொருள்வயிற்
பிரிந்த காலத்து தோழி இவள் ஆற்றா ளாயினாள் இவளை இழந்தேன் எனக் கவன்றாள்
வற்புறுத்தது அக்காலத்து ஆற்றாளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
359. குறிஞ்சி - கபிலர்
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா
அலங்கு குலைக் காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்
கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
வாடலகொல்லோ தாமே அவன் மலைப்
போருடை வருடையும் பாயா
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே
- தோழி தழையேற்றுக் கொண்டு நின்று
தலைமகன் குறிப்பின் ஓடியது
விளக்கவுரை :
360. மருதம் - ஓரம்போகியார்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென்
மற்றும் கூடும் மனை மடி துயிலே
- பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி
தலைமகள் குறிப்பறிந்து வாயில் மறுத்தது தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :