நற்றிணை 346 - 350 of 400 பாடல்கள்



நற்றிணை 346 - 350 of 400 பாடல்கள்

346. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனைமன் போலா என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே

- பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது

விளக்கவுரை :

347. குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார்

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
மாதிர நனந் தலை புதையப் பாஅய்
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு
வான் புகு தலைய குன்றம் முற்றி
அழி துளி தலைஇய பொழுதில் புலையன்
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் எனப்
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய
காண வீடுமோ தோழி என் நலனே

- வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது

விளக்கவுரை :

348. நெய்தல் - வெள்ளி வீதியார்

நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலி வரும் சும்மையடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ் உலகம்
உலகமொடு பொரும்கொல் என் அவலம் உறு நெஞ்சே

- வேட்கை பெருகத் தாங்கலளாய் ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது

விளக்கவுரை :

349. நெய்தல் - மிளை கிழான் நல்வேட்டனார்

கடுந் தேர் ஏறியும் காலின் சென்றும்
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார்ப்
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல
பின்னிலை முனியா நம்வயின்
என் என நினையும்கொல் பரதவர் மகளே

- தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது

விளக்கவுரை :

350. மருதம் - பரணர்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழனப் பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார
விடேஎன் விடுக்குவென்ஆயின் கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆசு இல் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே

- தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books