நற்றிணை 331 - 335 of 400 பாடல்கள்



நற்றிணை 331 - 335 of 400 பாடல்கள்

331. நெய்தல் - உலோச்சனார்

உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவற் குப்பை
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண் திமில் எண்ணும் தண் கடற் சேர்ப்ப
இனிதேதெய்ய எம் முனிவு இல் நல் ஊர்
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியாச் சேரியும் உடைத்தே

- தோழி இரவுக்குறி நேர்ந்தது

விளக்கவுரை :

332. குறிஞ்சி - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்

இகுளை தோழி இஃது என் எனப்படுமோ
குவளை குறுநர் நீர் வேட்டாங்கு
நாளும்நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி
தலைநாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே

- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்பதலைவி கூறியது வன்புறை எதிர்மறுத்ததூஉம் ஆம்

விளக்கவுரை :

333. பாலை - கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்

மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தென
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்
நீங்குகமாதோ நின் அவலம் ஓங்குமிசை
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே

- பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது

விளக்கவுரை :

334. குறிஞ்சி - அறியப்படவில்லை

கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப
கலையடு திளைக்கும் வரைஅக நாடன்
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
மின்னு வசி விளக்கத்து வருமெனின்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே

- தோழி இரவுக்குறி முகம் புக்கது

விளக்கவுரை :

335. நெய்தல் - வெள்ளிவீதியார்

திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் அன்றி
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று
காமம் பெரிதே களைஞரோ இலரே

- காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books