நற்றிணை 321 - 325 of 400 பாடல்கள்
321. முல்லை - மதுரை அளக்கர் ஞாழார்
மகனார் மள்ளனார்
செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை
பாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர
கான முல்லைக் கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல
வருந்தும்கொல்லோ திருந்துஇழை அரிவை
வல்லைக் கடவுமதி தேரே சென்றிக
குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற
பெருங் கலி மூதூர் மரம் தோன்றும்மே
- வினை முற்றி மீள்வான்
தேர்ப்பாகற்குச் சொல்லியது
விளக்கவுரை :
322. குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியன்
சேந்தன் கொற்றனார்
ஆங்கனம் தணிகுவதுஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை
வாய்கொல் வாழி தோழி வேய் உயர்ந்து
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரிக்
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணரக் கூறி வேலன்
இன் இயம் கறங்கப் பாடி
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே
- தோழி சிறைப்புறமாகச் சொல்லியது
தலைமகள் பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
323. நெய்தல் - வடம வண்ணக்கன்
பேரிசாத்தனார்
ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவேதெய்ய மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவணம்
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின்
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த்
தெரி மணி கேட்டலும் அரிதே
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே
- தோழி இரவுக்குறி நேர்ந்தது
விளக்கவுரை :
324. குறிஞ்சி - கயமனார்
அந்தோ தானே அளியள் தாயே
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்
பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்
கோடு முற்று யானை காடுடன் நிறைதர
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே
- தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
325. பாலை - மதுரைக் காருலவியங்
கூத்தனார்
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
ஊக்கு அருங் கவலை நீந்தி மற்று இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய
வீங்கு நீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே
- தோழி செலவு அழுங்குவித்தது
விளக்கவுரை :