நற்றிணை 316 - 320 of 400 பாடல்கள்



நற்றிணை 316 - 320 of 400 பாடல்கள்

316. முல்லை - இடைக்காடனார்

மடவது அம்ம மணி நிற எழிலி
மலரின் மௌவல் நலம் வரக் காட்டி
கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்
நல் நுதல் நீவிச் சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே

- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது

விளக்கவுரை :

317. குறிஞ்சி - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

நீடு இருஞ் சிலம்பின் பிடியடு புணர்ந்த
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள்ஆயின் பனி கலந்து
என் ஆகுவகொல்தானே எந்தை
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே

- தோழி தலைமகனை வரைவு கடாயது

விளக்கவுரை :

318. பாலை - பாலை பாடிய பெருங் கடுங்கோ

நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக
நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தடக்கை சுருக்கி பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே

- பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

319. நெய்தல் - வினைத்தொழில் சோகீரனார்

ஓதமும் ஒலி ஓவின்றே ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே
மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலோடு ஏறி
ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடு நாள்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்
தட மென் பணைத் தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி
மீன் கண் துஞ்சும் பொழுதும்
யான் கண் துஞ்சேன் யாதுகொல் நிலையே

- காப்பு மிகுதிக்கண் ஆற்றானாகிய தலைமகன் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது

விளக்கவுரை :

320. மருதம் - கபிலர்

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்கொல் என்றி ஆயின்
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே

- பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப நெருங்கிச் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books