நற்றிணை 286 - 290 of 400 பாடல்கள்



நற்றிணை 286 - 290 of 400 பாடல்கள்

286. பாலை - துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்

ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆயிழை நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமே

- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது

விளக்கவுரை :

287. நெய்தல் - உலோச்சனார்

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்
காமம் பெருமையின் வந்த ஞான்றை
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்
தேர் மணித் தௌ இசைகொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே

- காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது

விளக்கவுரை :

288. குறிஞ்சி - குளம்பனார்

அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று
நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ
கட்டின் கேட்கும்ஆயின் வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும் இந்
நெடு வேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே

- தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய் வெறி அறிவுறீஇ வரைவு கடாயது

விளக்கவுரை :

289. முல்லை - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வதாயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து கடுங் குரல் பயிற்றி
கார் செய்து என் உழையதுவே ஆயிடை
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே

- பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது

விளக்கவுரை :

290. மருதம் - மதுரை மருதன் இளநாகனார்

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்
கொள்ளல்மாதோ முள் எயிற்றோயே
நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே

- பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது பரத்தையிற்பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப தோழி சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books