நற்றிணை 281 - 285 of 400 பாடல்கள்



நற்றிணை 281 - 285 of 400 பாடல்கள்

281. பாலை - கழார்க் கீரன் எயிற்றியார்

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியடு தூங்கி
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்
தாம் நம் உழையராகவும் நாம் நம்
பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழி நம் காதலோரே

- வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது ஆற்றாள் எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்

விளக்கவுரை :

282. குறிஞ்சி - நல்லூர்ச் சிறு மேதாவியார்

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட
நல் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின் நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே

- சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

விளக்கவுரை :

283. நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார்

ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே

- பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

284. பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே

- பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது

விளக்கவுரை :

285. குறிஞ்சி - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்
இரவின் வருதல் அன்றியும் உரவுக் கணை
வன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையடு
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு காற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே

- தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய் தலைமகன் கேட்ப அம்பலும் அலரும் ஆயிற்று என்று சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books