நற்றிணை 276 - 280 of 400 பாடல்கள்



நற்றிணை 276 - 280 of 400 பாடல்கள்

276. குறிஞ்சி - தொல் கபிலர்

கோடு துவையா கோள் வாய் நாயடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர் என்றிஆயின்
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது
சேந்தனை சென்மதி நீயே பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே

- பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது

விளக்கவுரை :

277. பாலை - தும்பி சேர் கீரனார்

கொடியை வாழி தும்பி இந் நோய்
படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்
அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே

- பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரியஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது

விளக்கவுரை :

278. நெய்தல் - உலோச்சனார்

படு காழ் நாறிய பராஅரைப் புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பல் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே

- தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது

விளக்கவுரை :

279. பாலை - கயமனார்

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் சினைதொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையடு
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதர் உழந்து அசையினகொல்லோ ததர்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே

- மகட் போக்கிய தாய் சொல்லியது

விளக்கவுரை :

280. மருதம் - பரணர்

கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய் என்றி தோழி புலவேன்
பழன யாமைப் பாசடைப் புறத்து
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே

- வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books