நற்றிணை 261 - 265 of 400 பாடல்கள்
261. குறிஞ்சி - சேந்தன் பூதனார்
அருளிலர்வாழி தோழி மின்னு வசிபு
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெஞ் சுடர் கரந்த கமஞ் சூல் வானம்
நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து
களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை
எருவை நறும் பூ நீடிய
பெரு வரைச் சிறு நெறி வருதலானே
- சிறைப்புறமாகத் தோழி இரவுக்குறி
விலக்கி வரைவு கடாயது தலைமகள் இயற்பட மொழிந்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
262. பாலை - பெருந்தலைச் சாத்தனார்
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்
ஆடு மயிற் பீலியின் வாடையடு துயல்வர
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்
பணைத் தோள் அரும்பிய சுணங்கின் கணைக் கால்
குவளை நாறும் கூந்தல் தேமொழி
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப
பிரிவல் நெஞ்சு என்னும்ஆயின்
அரிது மன்றம்ம இன்மையது இளிவே
- தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து
பிரிவிடை விலக்கியது
விளக்கவுரை :
263. நெய்தல் - இளவெயினனார்
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்
இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும் இரை வேட்டு
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு
உரைத்த தோழி உண்கண் நீரே
- சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு
கடாயது
விளக்கவுரை :
264. பாலை - ஆவூர்க் காவிதிகள்
சாதேவனார்
பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈகாண் தோன்றும் எம் சிறு நல் ஊரே
- உடன் போகாநின்ற தலைமகன் தலைமகளை
வற்புறீஇயது உடன்போய் மறுத்தரா
நின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதும் ஆம்
விளக்கவுரை :
265. குறிஞ்சி - பரணர்
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூந் தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே
- பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு
உரைத்தது
விளக்கவுரை :