நற்றிணை 256 - 260 of 400 பாடல்கள்



நற்றிணை 256 - 260 of 400 பாடல்கள்

256. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இந் நிலை தவிர்ந்தனம் செலவே வைந் நுதிக்
களவுடன் கமழ பிடவுத் தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே

- பொருள்வயிற் பிரிந்தான் என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது

விளக்கவுரை :

257. குறிஞ்சி - வண்ணக்கன் சோருமருங்குமரனார்

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்
பொன் மருள் நறு வீ கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்
நடு நாள் வருதி நோகோ யானே

- தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது

விளக்கவுரை :

258. நெய்தல் - நக்கீரர்

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே

- தோழி செறிப்பு அறிவுறீஇயது

விளக்கவுரை :

259. குறிஞ்சி - கொற்றங் கொற்றனார்

யாங்குச் செய்வாம்கொல் தோழி பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி அவ் வாய்ப்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன் விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே

- தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது

விளக்கவுரை :

260. மருதம் - பரணர்

கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழத்
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்மன் யான் மறந்து அமைகலனே

- ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books