நற்றிணை 246 - 250 of 400 பாடல்கள்
246. பாலை - காப்பியஞ் சேந்தனார்
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்
வருவர் வாழி தோழி புறவின்
பொன் வீக் கொன்றையடு பிடவுத் தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே
- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
வற்புறீஇயது
விளக்கவுரை :
247. குறிஞ்சி - பரணர்
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி
எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ
நல்காய்ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே
- நீட்டியாமை வரை எனத் தோழி சொல்லியது
விளக்கவுரை :
248.
முல்லை
- காசிபன் கீரனார்
சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணிபெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே
- பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத்
தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது
விளக்கவுரை :
249. நெய்தல் - உலோச்சனார்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ
சென்றது அன்றோ கொண்கன் தேரே
- வரைவிடை மெலிந்தது
விளக்கவுரை :
250. மருதம் - மதுரை ஓலைக் கடையத்தார்
நல்வெள்ளையார்
நகுகம் வாராய் பாண பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
யாரையோ என்று இகந்து நின்றதுவே
- புதல்வனொடு புக்க தலைமகன்
ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது
விளக்கவுரை :