நற்றிணை 241 - 245 of 400 பாடல்கள்
241. பாலை - மதுரைப் பெருமருதனார்
உள்ளார்கொல்லோ தோழி கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பலவுடன்
வேந்து வீசு கவரியின் பூம் புதல் அணிய
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து
பல் இதழ் உண்கண் கலுழ
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே
- தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது
விளக்கவுரை :
242. முல்லை - விழிக்கட்பேதைப்
பெருங்கண்ணனார்
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே
- வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன்
கார் கண்டு பாகற்குச் சொல்லியது
விளக்கவுரை :
243. பாலை - காமக்கணிப் பசலையார்
தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்
கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் என
கையறத் துறப்போர்க் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல
இன்னாது ஆகிய காலை பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரிது மன்றம்ம அறத்தினும் பொருளே
- பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது
விளக்கவுரை :
244. குறிஞ்சி - கூற்றங்குமரனார்
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய்
தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே
- அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி
முகம் புக்கது
விளக்கவுரை :
245. நெய்தல் - அல்லங்கீரனார்
நகையாகின்றே தோழி தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்
தௌ தீம் கிளவி யாரையோ என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்
தான் அணங்குற்றமை கூறி கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே
- குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம்
புக்கது
விளக்கவுரை :