நற்றிணை 211 - 215 of 400 பாடல்கள்
211. நெய்தல் - கோட்டியூர் நல்லந்தையார்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்
கொடுங் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே
- வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற
தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது
விளக்கவுரை :
212. பாலை- குடவாயிற் கீரத்தனார்
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர்
நெடும் பெருங் குன்றம் நீந்தி நம் வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம் பொன் கழல்தொடி நோக்கி மா மகன்
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும்
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே
- பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த
வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது
விளக்கவுரை :
213. குறிஞ்சி - கச்சிப்பேட்டுப்
பெருந்தச்சனார்
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி
கன்று கால்யாத்த மன்றப் பலவின்
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்
குழவிச் சேதா மாந்தி அயலது
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென
கருவி மா மழை வீழ்ந்தென எழுந்த
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக்
கொய் புனம் காவலும் நுமதோ
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே
- மதி உடன்படுக்கும் தலைமகன்
சொல்லியது
விளக்கவுரை :
214. பாலை - கருவூர்க் கோசனார்
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை
அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இருங் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே
- உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட
தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது
விளக்கவுரை :
215. நெய்தல் - மதுரைச் சுள்ளம் போதனார்
குண கடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பி
பகல் கெழு செல்வன் குடமலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு
தங்கின் எவனோதெய்ய செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே
- பகற் குறி வந்து மீள்வானை அவள் ஆற்றும்
தன்மையள் அல்லள் நீயிர் இங்குத் தங்கற் பாலீர் எமரும் இன்னது ஒரு தவற்றினர் எனத்
தோழி தலைமகற்குச் சொல்லியது இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்
விளக்கவுரை :