நற்றிணை 121 - 125 of 400 பாடல்கள்



நற்றிணை 121 - 125 of 400 பாடல்கள்

121. முல்லை - ஒரு சிறைப்பெரியனார்

விதையர் கொன்ற முதையல் பூழி
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
அரலை அம் காட்டு இரலையடு வதியும்
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே
எல்லி விட்டன்று வேந்து எனச் சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண் வர
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
வண் பரி தயங்க எழீஇ தண் பெயற்
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய
எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே

- வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது

விளக்கவுரை :

122. குறிஞ்சி - செங்கண்ணனார்

இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் கால் செந்தினை கடியுமுண்டென
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள் இருள்
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல் அன்றுகொல் யாதுகொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்துமாறே

- சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது

விளக்கவுரை :

123. நெய்தல் - காஞ்சிப் புலவனார்

உரையாய் வாழி தோழி இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே

- தலைவன்சிறைப்புறத்தானாக தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

விளக்கவுரை :

124. நெய்தல் - மோசி கண்ணத்தனார்

ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அதுதானும் வந்தன்று
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்
நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே

- பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது

விளக்கவுரை :

125. குறிஞ்சி - அறியப்படவில்லை

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி
நல் அரா நடுங்க உரறி கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும்
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நல் நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்மன் தோழி மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே

- வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books