நற்றிணை 126 - 130 of 400 பாடல்கள்



நற்றிணை 126 - 130 of 400 பாடல்கள்

126. பாலை - அறியப்படவில்லை

பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி
துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலும் இன்றே அதனால்
நில்லாப் பொருட் பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே

- பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது

விளக்கவுரை :

127. நெய்தல் - சீத்தலைச் சாத்தனார்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம் என்னும் கானலானே

- பாணற்குத் தோழி வாயில் மறுத்தது

விளக்கவுரை :

128. குறிஞ்சி - நற்சேந்தனார்

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி
அழுதல் ஆன்றிசின் ஆயிழை ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக அதற்கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று யான் உற்ற நோயே

- குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்

விளக்கவுரை :

129. குறிஞ்சி - ஒளவையார்

பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே சென்று
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே அதன்தலை
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே

- பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது

விளக்கவுரை :

130. நெய்தல் - நெய்தல் தத்தனார்

வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ
எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே விரிநீர்
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே

- பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books