நற்றிணை 116 - 120 of 400 பாடல்கள்



நற்றிணை 116 - 120 of 400 பாடல்கள்

116. குறிஞ்சி - கந்தரத்தனார்

தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்பமாதோ
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை
சூல் முதிர் மடப் பிடி நாள் மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே

- வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது

விளக்கவுரை :

117. நெய்தல் - குன்றியனார்

பெருங் கடல் முழங்க கானல் மலர
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே

- வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது சிறைப்புறமும்ஆம்

விளக்கவுரை :

118. பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே

- பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது

விளக்கவுரை :

119. குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார்

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர்
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும்
பல் மலர்க் கான் யாற்று உம்பர் கருங் கலை
கடும்பு ஆட்டு வருடையடு தாவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியடு
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே

- சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது

விளக்கவுரை :

120. மருதம் - மாங்குடி கிழார்

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நப் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பாள் அன்று
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே

- விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books