நற்றிணை 306 - 310 of 400 பாடல்கள்



நற்றிணை 306 - 310 of 400 பாடல்கள்

306. குறிஞ்சி - உரோடோகத்துக் கந்தரத்தனார்

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர் கொடுங் குரல்
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே

- புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது சிறைப்புறமும் ஆம்

விளக்கவுரை :

307. நெய்தல் - அம்மூவனார்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணற் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே

- குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

விளக்கவுரை :

308. பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார்

செல விரைவுற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆயிழை
யாம் தற் கரையவும் நாணினள் வருவோள்
வேண்டாமையின் மென்மெல வந்து
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து
ஆகம் அடைதந்தோளே அது கண்டு
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே

- நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன் தலைமகளை எய்தி ஆற்றானாய் நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது

விளக்கவுரை :

309. குறிஞ்சி - கபிலர்

நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று என
கூறுவைமன்னோ நீயே
தேறுவன்மன் யான் அவருடை நட்பே

- வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது

விளக்கவுரை :

310. மருதம் - பரணர்

விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே வல்லை
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
வள் உயிர்த் தண்ணுமை போல
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே

- வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books