நற்றிணை 91 - 95 of 400 பாடல்கள்



நற்றிணை 91 - 95 of 400 பாடல்கள்

91. நெய்தல் - பிசிராந்தையார்

நீ உணர்ந்தனையே தோழி வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே

- தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது

விளக்கவுரை :

92. பாலை - அறியப்படவில்லை

உள்ளார்கொல்லோ தோழி துணையடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே

- பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது

விளக்கவுரை :

93. குறிஞ்சி = மலையனார்

பிரசம் தூங்க பெரும் பழம் துணர
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே

- வரைவு கடாயது

விளக்கவுரை :

94. நெய்தல் - இளந்திரையனார்

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே

- தலைமகன் சிறைப்புறமாக தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

விளக்கவுரை :

95. குறிஞ்சி - கோட்டம்பலவனார்

கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே குழு மிளைச் சீறூர்
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே

- தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்து என உரைத்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books