நற்றிணை 86 - 90 of 400 பாடல்கள்



நற்றிணை 86 - 90 of 400 பாடல்கள்

86. பாலை - நக்கீரர்

அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே

- குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

விளக்கவுரை :

87. நெய்தல் - நக்கண்ணையார்

உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே

- வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது

விளக்கவுரை :

88. குறிஞ்சி - நல்லந்துவனார்

யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே

- சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது

விளக்கவுரை :

89. முல்லை - இளம் புல்லூர்க் காவிதி

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே

- பொருள் முற்றி மறுத்தந்தான் எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது

விளக்கவுரை :

90. மருதம் - அஞ்சில் அஞ்சியார்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடி
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா
நயன் இல் மாக்களடு கெழீஇ
பயன் இன்று அம்ம இவ் வேந்துடை அவையே

- தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய் பாணனை நெருங்கி வாயில்மறுத்தது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books