குறுந்தொகை 396 - 401 of 401 பாடல்கள்



குறுந்தொகை 396 - 401 of 401 பாடல்கள்

396. பாலை - செவிலி கூற்று

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்
விளையாடு ஆயமொடு அயர்வோ ளினியே
எளிதென உணர்ந்தனள் கொல்லோ முளிசினை
ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்
மழைமுழங்கு கடுங்குரல் ஓர்க்கும்
கழைதிரங் காரிடை அவனொடு செலவே.

                                      - கமயனார்.

விளக்கவுரை :

397. நெய்தல் - தோழி கூற்று

நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்
டன்னா வென்னுங் குழவி போல
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும்
நின்வரைப் பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே.

                                      - அம்மூவனார்.

விளக்கவுரை :

398. பாலை - தலைவி கூற்று

தேற்றா மன்றே தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக்
கயலே ருண்கட் கனங்குழை மகளிர்
கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய
சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு
மெய்ம்மலி யுவகையி னெழுதரு
கண்கலி ழுகுபனி யரக்கு வோரே.

                                      - பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கவுரை :

399. மருதம் - தலைவி கூற்று

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.

                                      - பரணர்.

விளக்கவுரை :

400. முல்லை - தலைவன் கூற்று

சேயாறு செல்வா மாயின் இடரின்று
களைகலம் காமம் பெருந்தோட் கென்று
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய வேகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வல்லோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந் துறைவியை நல்க லானே.

                                      - பேயனார்.

விளக்கவுரை :

401. நெய்தல் - தலைவி கூற்று

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே.

                                      - அம்மூவனார்.

விளக்கவுரை :

குறுந்தொகை முற்றிற்று

குறுந்தொகை, எட்டுத் தொகை, Kurunthogai, ettu thogai, tamil books