நற்றிணை 396 - 400 of 400 பாடல்கள்



நற்றிணை 396 - 400 of 400 பாடல்கள்

396. குறிஞ்சி - அறியப்படவில்லை

பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே

- தோழி தலைமகனை வரைவு கடாயது வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉம் ஆம் இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்

விளக்கவுரை :

397. பாலை - அம்மூவனார்

தோளும் அழியும் நாளும் சென்றென
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே

- பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது

விளக்கவுரை :

398. நெய்தல் - உலோச்சனார்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்
சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே
பல் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்
சென்மோ சேயிழை என்றனம் அதன் எதிர்
சொல்லாள் மெல்லியல் சிலவே நல் அகத்து
யாணர் இள முலை நனைய
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே

- முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது

விளக்கவுரை :

399. குறிஞ்சி - அறியப்படவில்லை

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நிலவரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்
பெருமை உடையள் என்பது
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே

- நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி எம்பெருமான் இதற்காய நல்லது புரியும் என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும் என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

விளக்கவுரை :

400. மருதம் - ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
நினின்று அமைகுவென்ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாதாங்கு சிறந்த
கேண்மையடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே

- பரத்தை தலைவனைப் புகழ்ந்தது முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின் நின் இன்று அமையாம் என்று சொன்னமையான் என்பது

விளக்கவுரை :

நற்றிணை முற்றும்

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books