குறுந்தொகை 321 - 325 of 401 பாடல்கள்



குறுந்தொகை 321 - 325 of 401 பாடல்கள்

321. குறிஞ்சி - தோழி கூற்று

மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்
மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை
மன்ற மரையா இரிய ஏறட்டுச்
செங்கண் இரும்புலி குழுமும் அதனால்
மறைத்தற் காலையோ அன்றே
திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே.

                                      - பெயர் அறியப்பட வில்லை.

விளக்கவுரை :

322. குறிஞ்சி - தலைவி கூற்று

அமர்க்க ணாமான் அஞ்செவிக் குழவி
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு
மருவின் இனியவு முளவோ
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.

                                      - ஐயூர் முடவனார்.

விளக்கவுரை :

323. முல்லை - தலைவன் கூற்று

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.

                                      - பதடி வைகலார்.

விளக்கவுரை :

324. நெய்தல் - தோழி கூற்று

கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே.

                                      - கவை மகனார்.

விளக்கவுரை :

325. நெய்தல் - தலைவி கூற்று

சேறுஞ் சேறு மென்றலின் பண்டைத்தன்
மாயச் செலவாச் செத்து மருங்கற்று
மன்னிக் கழிகென் றேனே அன்னோ
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்றென் இடைமுலை நிறைந்தே.

                                      - நன்னாகையார்.

விளக்கவுரை :

குறுந்தொகை, எட்டுத் தொகை, Kurunthogai, ettu thogai, tamil books