குறுந்தொகை 236 - 240 of 401 பாடல்கள்
236.
நெய்தல்
- தோழி கூற்று
விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே.
- நரிவெரூஉத் தலையார்.
விளக்கவுரை :
237.
பாலை
- தலைவன் கூற்று
அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அஃ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.
- அள்ளூர் நன்முல்லையார்.
விளக்கவுரை :
238.
மருதம்
- தோழி கூற்று
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.
- குன்றியனார்.
விளக்கவுரை :
239.
குறிஞ்சி
- தலைவி கூற்று
தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே.
- ஆசிரியர் பெருங்கண்ணனார்.
விளக்கவுரை :
240.
முல்லை
- தலைவி கூற்று
பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் றலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே.
- கொல்லனழிசியார்.
விளக்கவுரை :