நற்றிணை 196 - 200 of 400 பாடல்கள்
196. நெய்தல் - வெள்ளைக்குடி நாகனார்
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே
- நெட்டிடை கழிந்து பொருள்வயிற்
பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது
விளக்கவுரை :
197. பாலை - நக்கீரர்
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ
தௌ ந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டே
- வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத்
தோழி ஆற்றுவித்தது
விளக்கவுரை :
198. பாலை - கயமனார்
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை
தன் ஊர் இடவயின் தொழுவேன் நுண் பல்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்
தந்தைதன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே
- பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக்
கண்டார்க்குச் சொல்லியது
விளக்கவுரை :
199. நெய்தல் - பேரி சாத்தனார்
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர்
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே
- வன்புறை எதிரழிந்தது
விளக்கவுரை :
200. மருதம் - கூடலூர்ப் பல் கண்ணனார்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
சாறு என நுவலும் முது வாய்க் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி
கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின் எனவே
- தோழி தலைமகளது குறிப்பு அறிந்து
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப குயவனைக் கூவி இங்ஙனம் சொல்லாயோ என்று குயவற்குச்
சொல்லியது
விளக்கவுரை :
