நற்றிணை 186 - 190 of 400 பாடல்கள்



நற்றிணை 186 - 190 of 400 பாடல்கள்

186. பாலை - அறியப்படவில்லை

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே

- பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது

விளக்கவுரை :

187. நெய்தல் - ஒளவையார்

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய
பல் பூங் கானலும் அல்கின்றன்றே
இன மணி ஒலிப்ப பொழுது படப் பூட்டி
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய
தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே

- தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது

விளக்கவுரை :

188. குறிஞ்சி அறியப்படவில்லை

படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே

- பகற்குறி மறுத்து வரைவு கடாயது

விளக்கவுரை :

189. பாலை அறியப்படவில்லை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ
எவ் வினை செய்வர்கொல் தாமே வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே

- பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

விளக்கவுரை :

190. குறிஞ்சி அறியப்படவில்லை

நோ இனி வாழிய நெஞ்சே மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழைக் கண் குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

- பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம் இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books