நற்றிணை 61 - 65 of 400 பாடல்கள்



நற்றிணை 61 - 65 of 400 பாடல்கள்

61. குறிஞ்சி - சிறுமோலிகனார்

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினெனாக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை
துஞ்சாயோ என் குறுமகள் என்றலின்
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே

- தலைவன் வரவு உணர்ந்து தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது

விளக்கவுரை :

62. பாலை - இளங்கீரனார்

வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாட் திங்கள்
உரறு குரல் வெவ் வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரது எனவே

- முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன் பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது

விளக்கவுரை :

63. நெய்தல் - உலோச்சனார்

உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்
அறன் இல் அன்னை அருங் கடிப் படுப்ப
பசலை ஆகி விளிவதுகொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம்
மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே

- அலர் அச்சத்தால்தோழி சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது

விளக்கவுரை :

64. குறிஞ்சி - உலோச்சனார்

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் தோழி யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே

- பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது

விளக்கவுரை :

65. குறிஞ்சி - கபிலர்

அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியடு பொருத புண் கூர் யானை
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர்
விற் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே

- விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது

விளக்கவுரை :

நற்றிணை, எட்டுத் தொகை, nartinai, ettu thogai, tamil books