நற்றிணை 146 - 150 of 400 பாடல்கள்
146. குறிஞ்சி - கந்தரத்தனார்
வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே
- பின்னின்ற தலைவன்முன்னிலைப்
புறமொழியாக தோழி கேட்பச்சொல்லியது
விளக்கவுரை :
147. குறிஞ்சி - கொள்ளம்பக்கனார்
யாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள்
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே
- சிறைப்புறமாகத்தோழி சொல்லியது
விளக்கவுரை :
148. பாலை - கள்ளம்பாளனார்
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அருஞ் சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே
- பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறீஇயது
விளக்கவுரை :
149. நெய்தல் - உலோச்சனார்
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல்
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடு நாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே
- தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது
சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்
விளக்கவுரை :
150. மருதம் - கடுவன் இளமள்ளனார்
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே
- தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை
தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது
விளக்கவுரை :
